‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' உறுதி மொழி ஏற்றுக்கொண்டார் முதல்வர் - எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலாவது சட்டசபைக் கூட்டம் இன்று கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த மே 2ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 7ம் தேதி கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக திமுகவைச் சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
சட்டசபையில், முதல்வர் ஸ்டாலின், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவியேற்றார்.
அப்போது, மக்கள் மனதில் இடம்பெற்று, தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல்வர் என சபாநாயகர் பாராட்டு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பதவியேற்றுக் கொண்டனர்.