சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு மனு தாக்கல்!
கடந்த மே 2ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 7ம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதே நாளில், 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அப்போது, இந்தக் கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தற்போது துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும், சபாநாயகர் பதவிக்கு அப்பாவுவும் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இவர்கள் மனுத் தாக்கல் செய்த போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.