அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு - உயர்கல்வித்துறை அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரியர் தேர்வுக்குப் பணம் கட்டினால் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவுக்கும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஆன்லைனில் நடந்த பொறியியல் அரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, பாரதிதாசன், பாரதியார், சென்னை, அன்னை தெரசா, திருவள்ளுவர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக மறு தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
மறு தேர்வை தோல்வி அடைந்தவர்களுடன், வெற்றி பெற்றவர்களும் எழுதலாம் எனவும், பிற மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan