தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு!
தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
நாளை நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்காலிக சபாநாயகராக இருக்கும் பிச்சாண்டி துணை சபாநாயகராகிறார். இருவரும் நாளை மறுநாள் மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிச்சாண்டியை விட அப்பாவு சட்டசபையில் கூடுதல் அனுபவம் உள்ளதால், அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.