நாளை முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்க உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்திய நாட்டில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்திய நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் யுனிட்டை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாட்டிற்கே அனைத்து ஆக்சிஜனும் கொடுக்க வேண்டும் என மாநில அரசு சார்பாக வாதிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசோ நாங்கள் தான் ஆக்சிஜனை பகிர்ந்து கொடுப்போம் என்று உறுதியாக கூறிவிட்டது.
இதனால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது -
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் மூலம் தமிழ்நாட்டிற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க உள்ளது.
மே 11ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில் துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் உற்பத்திக்காகவும், அதைப் பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.