திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் உடைப்பு - ஓபிஎஸ் கண்டனம்

tamilnadu
By Nandhini May 09, 2021 11:49 AM GMT
Report

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை அமைப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை மர்ம நபர்கள் சிலர் சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதைக் கண்டித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிலையை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நாட்டிற்கு உழைத்த தலைவர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற, இழி செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் செய்வோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.