இராஜபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டாமல் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இராஜபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டாமல் சாலைகள் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தொடர்ச்சியாக மரங்களை வெட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு மரமும் 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள், 100 ஆண்டுகள் வயதுடைய பழமை வாய்ந்தது. அதில் குறிப்பாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டி எடுத்துவிட்டு சாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய்யால் பாதித்த மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இயற்கையான ஆக்சிஜன் மரங்கள் மூலமே பெறப்படுகிறது.
மரங்களை வெட்டி அழித்து விட்டால் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உருவாகும். அதுவும் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் மரங்களை வெட்டுவதால், கொரோனா நோய்யால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காது.
இதைக் கருத்தில் கொண்டு மரங்களை வெட்டாமல் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் நவீன கருவிகள் மூலம் மரங்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் நட்டு வைத்து விட்டு, சாலை விரிவாக்கப் பணிகளை செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களும், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வரும் பசுமை ஆர்வலர்களும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.