தமிழகத்தில் முழு ஊரடங்கு - மெட்ரோ ரயில் சேவை ரத்து - நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், தொற்றால் 241 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஊரடங்கின் போது காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், பால் விநியோகம், பத்திரிகை விநியோகம் செய்வதற்குத் தடையில்லை என்றும், மருந்தகங்கள், மருத்துவமனைகள் முழு நேரமும் செயல்படும் என்றும் வங்கிகள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், சென்னையில் மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.