சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்லும் மக்கள் : காலியாகும் சென்னை!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இருப்பினும் நாளை 12 மணி வரை மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள் முதலியவை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்சி, ஆட்டோ ஆகிய வாகன போக்குவரத்திற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் டாஸ்மாக் இயக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமும் பெரும்பாலானோருக்கு எழுந்துள்ளது.
இதனையடுத்து, பலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதன்காரணமாக, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மக்களின் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. வெகு நேரம் வரிசையில் நின்று வாகனங்கள் செல்கின்றன. பைக்கில் தேவையான மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, குழந்தைகளுடன் பலரும் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.