பதவியேற்பு விழா - மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்!
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பதவியேற்பு விழாவிற்கு முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன், முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.அழகிரியும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதில் ஒரு அண்ணனாக எனக்கு பெருமை அளிக்கிறது. தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் நல்லாட்சி அமைப்பார் என்று அழகிரி வாழ்த்து தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தற்போது, மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் இருந்தே நேரடியாக அழைப்புச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.