மு.க. ஸ்டாலினுக்காக தயாராகும் முதல்வர் அறை!
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து கடந்த 2ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்று தமிழக ஆட்சியை பிடித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்க இருக்கிறார். மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா மிக எளிமையாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை பதவியேற்பு விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலமைச்சருக்கான கண்வாய் வாகனங்கள் ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தலைமை செயலகம் வந்து புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.