பகல் நேர கட்டுப்பாடுகள் - வெறிச்சோடி காணப்பட்ட மயிலாடுதுறை நகரம்
தமிழகத்தில் பகல் நேர கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு மயிலாடுதுறை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட வேண்டும். பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்படும் என்பதால் மயிலாடுதுறை கடைவீதியில் காலை முதல் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடவேண்டும் என்று நகராட்சி துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.
பகல் 12 மணிக்கு கடைகள் மூடப்பட்டதால், அப்போது முதல் பேருந்துகளில் பயணிகள் கூட்டமாக ஏறியதால் பலர் நின்றுகொண்டே பயணம் செய்தனர்.
பேருந்தில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.