தம்பியை நேரில் சந்தித்து நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இத்தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற தனது சித்தப்பா மு.க.தமிழரசு மற்றும் தம்பி அருள்நிதி்யைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் உதயநிதி. மேலும், தனது மாமா அமிர்தத்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட மு.க.தமிழரசு சித்தப்பாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். நான் வெளியூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எனக்காக வீடு வீடாகச் சென்று வாக்குசேகரிப்புப் பணிகளை ஒருங்கிணைத்த சித்தப்பாவிற்கு நன்றி.
அன்புத்தம்பி அருள்நிதியை நேரில் சந்தித்து என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் அமிர்தம் மாமா அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். என்னைப் பெருமையோடு வாழ்த்தி மகிழ்ந்த மாமா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி என்றார்.