கேம் விளையாட தந்தையிடமிருந்து ரூ.12 லட்சத்தை திருடிய 13 வயது சிறுவன்
சென்னையில் கேம் விளையாடுவதற்காக தந்தையிடமிருந்து ரூ. 12 லட்சத்தை 13 வயது சிறுவன் திருடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுவனுக்கு ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அவரது பெற்றோர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.
ஆனால், அந்த சிறுவன் படிக்காமல் மொபைல்போனை கேம் விளையாடுவதற்காக பயன்படுத்தி வந்துள்ளான். தொடர்ந்து அச்சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளான். இதனால், ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிய அச்சிறுவன், நெட் ரீசார்ஜ் செய்யவும், கேம்களுக்கு தேவையான பிளகின் (plug in)களை வாங்குவதற்கும் பணம் அதிகமாக தேவைப்பட்டுள்ளது.
இதனால், தனது தந்தை லாக்கரில் வைத்திருந்த ரூ.12 லட்சத்தை திருடி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு செலவு செய்திருக்கிறான். லாக்கரில் பணம் எடுப்பதற்காக தந்தை திறந்துள்ளார். அப்போது லாக்கரில் பணம் இல்லாததை கண்டு அச்சிறுவன் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது 13 வயது மகன் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறிது சிறிதாக ரூ.12 லட்சத்தை திருடியது தெரியவந்துள்ளது.
அந்த பணத்தை, முகப்பேரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் சுகுமார் உதவியுடன் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக ரீச்சார்ஜ் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவன் மற்றும் அவனது 3 நண்பர்கள் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் நொலம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.