தேசியக்கொடி கம்பத்தில் திமுக கொடியைப் பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு
தேசியக்கொடி கம்பத்தில் திமுக கொடியைப் பறக்கவிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மே 2ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
அப்போது, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதரனும், திமுக வேட்பாளர் பிரபாகரனும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தார்கள். அன்று மாலை நேரத்தில் திமுக வேட்பாளர் பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். உடனே, அவர் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு ஆதரவாளர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் இருந்த கிணத்துக்கிடவு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் நுழைந்த திமுகவினர் தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி பறக்கவிட்டனர். அலுவலகத்தின் மேற்கூரையில் நின்றுக் கொண்டு கையிலுள்ள திமுக கொடியை ஏந்தி அசைத்தனர். திடீரென முன்னிலை நிலவரம் மாறியது.
அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற தகவல் வந்ததையடுத்து, கொடியை அவசர, அவசரமாக கழற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். தேசியக்கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றியதை சிலர் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இதைப்பார்த்த பலரும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர். இதனையடுத்து, தேசிய கொடி கம்பத்தில் திமுக கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.