தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் மு.க.ஸ்டாலின்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 7ம் தேதி திமுக தலைவர் தமிழக முதல்வராக பதறியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின். அவரிடம் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம், அமைச்சரவை பட்டியலை வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
பதவியேற்பு விழா எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. ஸ்டாலினின் முதல் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.