மு.க.ஸ்டாலின் போடும் அந்த முதல் கையெழுத்து - ஆவலுடன் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக அமோகமாக வெற்றி அடைந்துள்ளது.
இதனையடுத்து, சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு கடிதம் கொடுத்தனர். இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையில், ஸ்டாலின் நாளை மறுநாள் 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதும் போடப்போகும் முதல் கையெழுத்து குறித்து பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது. தேர்தலில் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள வாக்குறுதிகளால் பெண்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில், வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு சென்று பணிகளை துவங்கும் ஸ்டாலின், எந்தத் திட்டத்தில் முதல் கையெழுத்திட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அல்லது அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி திட்டத்திற்கு கையெழுத்திடவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.