அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் - இனி எந்தப் பொறுப்பும் கிடையாது – மா.சுப்பிரமணியன் தகவல்

1 week ago

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினருக்கு இனி எந்தப் பொறுப்பும் கிடையாது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை முகப்பேறில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்திற்குள் இன்று காலை மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடினார்கள். அதுமட்டுமின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வந்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், திமுகவினர் இச்செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இது மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றது. கோபமடைந்த அவர், பெயர் பலகையை உடைத்தெறிந்து அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதனையடுத்து, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன் பேசியதாவது -

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இருவரும் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அம்மா உணவகம் தாக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர். அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்