தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா? - ஐகோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு!

tamilnadu
By Nandhini May 04, 2021 08:30 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. தற்போது சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால், வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தின் முடிவில் ஊரடங்குக் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. வரும் 20ம் தேதி வரை தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டது.

ஏற்கெனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. 

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா? - ஐகோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு! | Tamilnadu