ஆரணி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் தீ வைத்த மர்ம கும்பல் - இருசக்கர வாகனம், வீட்டுப்பொருட்கள் எரிந்து நாசம்
ஆரணி அருகே அதிமுக பிரமுகரின் வீட்டில் மர்ம கும்பல் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் மனோகரன். அதிமுகவைச் சேர்ந்த இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்திருக்கிறார். தற்போது மனோகரன் ஆரணியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முனுகப்பட்டில் உள்ள மனோகரனின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிலிருந்த பொருட்களுக்கும், இருசக்கர வாகனத்துக்கும் தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விபத்தில், வீட்டில் மளமளவென தீ பற்றியது.வீட்டில் இருந்த கட்டில் மெத்தை, உடைகள் உள்ளிட்ட பொருட்களும் மற்றும் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து, மனோகரன் உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்தார். இவர் அளித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.