அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் தலைவர் பதவியை மு. கருணாநிதி தக்க வைத்திருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு 2018ம் ஆண்டு திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
"கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 4.5.2021 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்"
— DMK (@arivalayam) May 3, 2021
- கழக பொதுச்செயலாளர் திரு. @katpadidmk MLA அவர்கள் அறிவிப்பு.#DMK #MKStalin pic.twitter.com/Ax48xYq98m
1967ம் ஆண்டு 14 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு ஆதரவாக பல பிரச்சாரங்களை மேற்கொண்டார். பிரச்சாரத்தால் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்று ஒரு முழு அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பணியாற்றி வரும் ஸ்டாலின் மேயர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிகத்திற்கு முதல்வர் என்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர போகிறதை தொண்டர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.