தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன் – விஜயகாந்த்
தேமுதிக தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கியது. ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது தேமுதிக. மேலும், அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா மொத்த டெபாசிட்டையும் இழந்தது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயக்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.