தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்!
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, மே 2ம் தேதி (நேற்று) காலை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
முதல்வர் வேட்பாளராக 5 பேர் இத்தேர்தல் களத்தில் இறங்கினர். அதில் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இருப்பினும், பழனிசாமி தலைமையில் தேர்தலைச் சந்தித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்த பெரும்பான்மையை இழந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 75 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் தோல்வியை தழுவியதால் தமிழக முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என நேற்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இதனையடுத்து, தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.
சேலத்தில் இருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார்.