கணவனை மனைவியே கொடூரமாக அடித்துக் கொலை-கேமராவை ஆய்வு செய்த போலீசார்,

tamilnadu
By Nandhini May 01, 2021 08:09 AM GMT
Report

மாங்காடு அருகே சொத்துக்காக கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவூர், மேற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (37). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பாஸ்கர் சொந்தமாக லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். முன்னாள் வார்டு உறுப்பினராக இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை பதிவுச் செய்த போலீசார் விசாரணை மேற்கொள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்றனர். அப்போது பாஸ்கர் வீடு வெளிப்புறம் பூட்டி இருந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒருவிதமான துர்நாற்றம் வீசியது. பின்பு, வீட்டின் வெளியே சுற்றிப் பார்த்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தனர். உடனே அந்த கேமராவை ஆய்வு செய்த போலீசார், நள்ளிரவில் உஷா ஒரு சாக்கு மூட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள குட்டையில் வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும், பாஸ்கரை ரத்தக் காயங்களுடன் காரில் ஏற்றி செல்வது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால், போலீசார் விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தினர்.

கணவனை மனைவியே கொடூரமாக அடித்துக் கொலை-கேமராவை ஆய்வு செய்த போலீசார், | Tamilnadu

இந்நிலையில், இன்று காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் காணாமல்போன பாஸ்கரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பாஸ்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை மேற்கொண்டதில் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை வீட்டிற்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள பாஸ்கரின் மனைவி உஷா, அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கணவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற உஷா வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவிகள்,  நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கு சொத்துப் பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக கணவரையே மனைவி அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.