தன் உழைப்பினால் உயரம் தொட்டவர் கே.வி.ஆனந்த் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

tamilnadu
By Nandhini Apr 30, 2021 10:42 AM GMT
Report

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் (54) மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர்.

அயன், கோ, மாற்றான், கவண் உட்பட பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய சிறந்த படைப்பாளியான அவர், தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.