15 நாட்கள் முழு ஊரடங்கு? - ஒத்துழைப்பு தர நாங்கள் தயார் - விக்கிரமராஜா

tamilnadu
By Nandhini Apr 30, 2021 10:42 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மால்கள், தியேட்டர்கள், ஷோரூம்கள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், கடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அடுத்த மாதமும் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்சம் 15 நாட்கள் ஊரடங்கு அமலாக வாய்ப்பு இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், 15 நாட்கள் முழு ஊரடங்கு என்று அரசாங்கம் முடிவெடுத்தால் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம். புதிய கட்டுப்பாடுகளால் வணிகர்களுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கும் போது வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம், சலுகைகள், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

15 நாட்கள் முழு ஊரடங்கு? - ஒத்துழைப்பு தர நாங்கள் தயார் - விக்கிரமராஜா | Tamilnadu