வால்பாறையில் 1 வயது பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்து பலி- வனத்துறையினர் ஆய்வு
வால்பாறையில் 1 வயது பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. வால்பாறை அக்காமலை பில் மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, 1 வயது குட்டி யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம் இணை இயக்குனர் ஆரோக்கிய ஜேவியர் தலைமையில், வால்பாறை சரகர் ஜெய்சந்திரன் முன்னியிலை, வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தன்னார்வளர் கணேஷ் மற்றும் வனவர் முனியாண்டி கீர்த்தி ஆகியோர் கொண்ட குழு வனப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.
மலை சரிவில் இருந்து விழுந்த குட்டியானை சுமார் 1 வயது இருக்கும் என்றும், இறந்த யானை பெண் யானை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது. வால்பாறை பகுதியில் மூன்று தினங்களில் இரண்டு யானைகள் இறந்திருப்பது யானைகளின் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.