18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது- ராதாகிருஷ்ணன்

tamilnadu
By Nandhini Apr 30, 2021 08:16 AM GMT
Report

 இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரே நாளில் 3 லட்சத்தைக் கடந்து செல்கிறது. இறப்போரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இதனால் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக மக்கள் முன்வந்துள்ளனர்.

தமிழகத்திலும், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு ஏப்ரல் 28ம் தேதி தொடங்கி விட்டது. இதற்கு நடுவே 1.5 கோடி தடுப்பூசிக்கு அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.

நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில், சனிக்கிழமை (மே 1) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருப்பதால் முழு ஊரடங்கு போடப்படாது என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், மே 1ம் தேதி திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சந்தேகம் தான் என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது- ராதாகிருஷ்ணன் | Tamilnadu

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது -

“மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. அரசு ஆர்டர் செய்த ஒன்றரை கோடி தடுப்பூசி எப்போது வந்து சேரும் என்று தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது சந்தேகம் தான். கால தாமதமும் கூட ஏற்படலாம்.

ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த எங்களிடம் இருப்பு உள்ளது. அவர்களுக்கு வழக்கம் போல தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.