அதிகரிக்கும் கொரோனா - நீதிமன்றத்தில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி!
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தையும் தாண்டிச் சென்றுள்ளது. அதே சமயம் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, நீதிமன்றத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி சுகாதாரத் துறைச் செயலர் தலைமை நீதிபதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை ஆகியவற்றில் அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதப் பணியாளர்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
மே 1ம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், ஊழியர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
