சாமி தரிசனம் செய்யத் தடை - கோயில் வெளியே பக்தர்களுக்கு அன்னதானம்
கோவில்களின் உள்ளே தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அன்னதானங்கள் பார்சல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு கோயில் வெளியே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பக்தர்கள் கோயில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், அன்னதானம் கிடைக்குமா என பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இதைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் வழிகாட்டல் படி, கோவிலுக்கு வெளியே அன்னதானத்தை பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, காஞ்சிபுரத்தில் பிரசித்திப் பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோயில்களில் மதிய உணவை பார்சல் செய்து பக்தர்களுக்கும், வயோதிகர்களுக்கும் கோவில் வெளியே, இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் வழங்கினார்கள்.