தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கக் கோரும் வழக்கில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேவையான ஆக்சிஜனை இலவசமாகத் தயாரித்து தருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதனையடுத்து, நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிரமாணப் பத்திரத்தில், ‘தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை மட்டுமே திறக்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கும். ஸ்டெர்லைட்டில் நடக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கும்’ என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் ஐந்து நிபுணர்களை தேர்வு செய்யும் என்று அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாக உள்ள ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது.