ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

tamilnadu
By Nandhini Apr 27, 2021 06:23 AM GMT
Report

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவியில் கூறப்பட்டுள்ளதாவது -

கொரோனா பரவலைத் தடுக்க 2020ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவில்லை.

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் மனு மீது 12 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.