கடந்த 2 நாட்களில் கொரோனா ஏற்றம் குறைந்துள்ளது– ராதாகிருஷ்ணன் தகவல்
கடந்த 2 நாட்களில் கொரோனா ஏற்றம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் கொரோனா ஏற்றத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. இது நல்ல அறிகுறி. இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிவது, தேவையில்லாமல் வெளியே செல்வது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். அரசு விடுத்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
ஞாயிறு பொதுமுடக்கத்தால் பாதிப்பு குறைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் கொரோனாவின் ஏற்றம் குறைந்துள்ளது. இன்னும் கடுமையாக உத்தரவுகளை பின்பற்றினால் பாதிப்பு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த வாரக் கடைசிக்குள் 2000 கூடுதல் படுக்கை வசதிகள் கூடுதலாக உருவாக்கப்பட உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.
வீட்டுக்குள்ளேயே பாதிப்புப் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொது நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், கொரோனா பாதிப்பு குறையும்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வீணாவதை 5% குறைத்திருக்கிறோம். டெசிவர் மருந்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு மையங்கள் விரிவுப்படுத்தப்படும் என்று பேசினார்.