ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் செய்வதறியாது தத்தளிக்கும் இராமநாதபுர மருத்துவமனைகள்
இராமநாதபுரத்தில் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலென்சுகள் திணறி வருகின்றன.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நோய் தொற்று ஆதி தீவிரமாகவும் வீரியத்துடனும் பரவி வருகிறது. குறிப்பாக டெல்லி, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்கு கூட இடம் இல்லை.
செல்லாத 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்றது போல தங்களுடைய உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக வரிசையில் பல மணி நேரம் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் பலர் அலட்சியமாக இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இராமநாதபுரத்தை பொறுத்தவரை நோய்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக நோய்தோற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் 687 பேர் மருத்துவமனையில் நோய்தோற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, தட்டுப்பாட்டை கணக்கில் கொண்டு துவக்கத்தில் 400 ரூபாய்க்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் தற்பொழுது 750 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக ஆக்ஸிஜன் வழங்கக்கூடிய மதுரையிலிருந்தே ஆக்ஸிஜன் வராததால் இராமநாதபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஆக்ஸிஜன் இன்றைக்குள் தீர்ந்து விடும் அபாயச் சூழல் உள்ளது.
இதனை எவ்வாறு சரிசெய்வது என தெரியாமல் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மண்டையை போட்டு பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு தற்போதைய தீர்வு நமக்கெல்லாம் கொரோனா வராது என்று மெத்தனமாக இருக்காமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து விலகி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.