‘அன்றே சொன்ன ரஜினி’ ஹேஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டிங்!
அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ்டாக், தற்போது சமூகவலைத்தளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாக கூறினார். அவர் கூறியதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனினும், தனது அந்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதே தனது இந்த முடிவுக்குக் காரணம். இந்த கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்பொழுது வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியது இல்லை என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
அவரது அந்த 3 பக்க அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த முக்கிய விஷயங்களை பிரித்து எடுத்து, தற்போது சமூகவலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஹேஷ்டாக்தான் அன்றே சொன்ன ரஜினி. ரஜினி அன்று சொல்லியவாறே, உருமாறிய கொரோனா இரண்டாவது அலையாக வந்து மிகப் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டும் அவரது ரசிகர்கள், தனது முடிவின் மூலம், ரசிகர்களை ரஜினி காப்பாற்றி இருப்பதாகக் கூறி நெகிழ்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றமே சுமத்தலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதை சுட்டிக்காட்டும் ரஜினி ரசிகர்கள், கொரோனா இரண்டாவது அலையின் கொடூரத்தை முன்கூட்டியே சரியாக கணித்தவர் ரஜினி என புகழாரம் சூட்டி வருகின்றனர்.