ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையில் கவனம் செலுத்த உள்நோக்கம் என்ன? - கி.வெங்கட்ராமன்
தமிழக அரசு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு எட்டுக் கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அலகை 4 மாதங்களுக்கு இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, நோய்த் தொற்று பரவல் அதிகரித்தால், அதற்கேற்ப அதன் காலத்தை நீட்டிப்பது என்று முடிவு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கூறியதாவது -
இந்திய அரசின் பி.எச்.இ.எல். தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று நிறுவனங்களின் வழியாக தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும். ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் தயாரிப்பு அலகுதான் தேவை. அப்படியென்றால், உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி, தமிழக அரசு இதை செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குழுவினர் கண்காணிப்பில் வேதாந்தா நிறுவனமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என அனுமதித்தது நாளைக்கு நிரந்தரமாக அந்த ஆலையை திறக்க வாய்ப்புக்கு வழிவகுக்கும்.
இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறிய கருத்தை தமிழக முதல்வர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், தி.மு.க. பேராளர் கனிமொழி, அனில் அகர்வாலின் வேதாந்தாவின் பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் தரலாம் என்று கூறிய ஆலோசனை மட்டும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. இதன் பின்னணி ஸ்டெர்லைட் ஆலையை இயங்க வைக்கும் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே, இதே வேதாந்தா குழுவினருக்குச் சொந்தமான ஆலைகள் இராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் (Hindustan Zinc Limited – HZL), சத்தீசுகட் மற்றும் ஒடிசா (Bharat Aluminium Company – BALCO), அரியானா (Cairn Oil & Gas), ஜார்கண்ட் (ESL Steel Limited), கோவா மற்றும் கர்நாடகா (Sesa Goa Iron Ore) ஆகியவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க வாய்ப்பு இருக்கும் போது, ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையில் கவனம் செலுத்துவது ஆக்சிஜன் தயாரிக்கிற நோக்கத்துடனா? அல்லது தமிழர்களை பலி கொடுத்து அனில் அகர்வாலுக்கு உதவி செய்யவா? என்ற வலுவாக சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர் அழுத்தமாக கூறினார்.