தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வேலை நேரம் குறைப்பு – இன்று முதல் அமல்

tamilnadu
By Nandhini Apr 26, 2021 08:36 AM GMT
Report

தமிழகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநில அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வேலை நேரத்தை குறைப்பது தொடர்பாக, தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ், உறுப்பினர் வங்கிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது -

கொரோனா இரண்டாவது அலையினால் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. வங்கி மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள், காலை, 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே இன்று முதல் செயல்படும். இந்த வேலை நேரம் ஏப்ரல் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

வங்கியில் வேலை செய்யும், கர்ப்பிணிகள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளி ஊழியர்கள் போன்றோர் அதிகாரியின் அனுமதியோடு வீட்டிலிருந்து வேலை செய்யலாம். கூட்டம் அதிகமாக உள்ள வங்கிகளில் போலீஸ் உதவிப் பெற்றுக் கொள்ளலாம். 

வங்கி ஊழியர்களும், அவர்களது குடும்பத்தாரும் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்வதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.     

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வேலை நேரம் குறைப்பு – இன்று முதல் அமல் | Tamilnadu