சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்- அதிகாரிகள் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், உள்நாட்டிற்குள் பயணம் செய்யும் பயணிகளுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் உட்பட 6 வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் தேவை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தில் சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும்.
கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் விமானங்களில் பயணம் செய்ய முடியும். சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.