நீலகிரியில் மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை உடனடியாக திறக்கக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா தலங்களை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்றும், வெளிமாநில மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உதகையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைக் காண ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
வணிகர்கள், டேக்சி ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், உணவகங்கள், புகைபட கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுற்றுலாவையே நம்பி இருந்து வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்துச சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
இதனையடுத்து, கொரோனா எளிதாக பரவும் திரையரங்குகள், மஹால்களை மூடாத தமிழக அரசு சுற்றுலாத் தலங்களை மூடியதைக் கண்டித்தும், 50 சதவித சுற்றுலாப் பயணிகளை மாவட்டத்திற்கு வர அனுமதிக்கக் கூறியும் உதகை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த சுற்றுலாவை நம்பி உள்ள வணிகர்கள், டேக்சி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், உணவக உரிமையாளர்கள், தொழிலாளர்கள், புகைபட கலைஞர்கள் கருப்புப் பேட்ச் மற்றும் கருப்பு முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
அப்போது மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை, உடனடியாக திறக்கக் கோரி கோசமிட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.