முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு திடீரென விசிட் செய்தார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்
தமிழக முதல்வர் பழனிசாமியை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை காட்டிலும் 2ம் கொரோனாவின் அலையின் தாக்குதல் வீரியமிக்கதாக உள்ளது.
இரண்டாம் அலையில் மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 10 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நோயைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று நம்பிக்கை அளித்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்திருக்கிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ராஜீவ் ரஞ்சனுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சென்றார். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.