கலாமின் கனவை நனவாக்கி வரும் ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம்!
கலாமின் கனவை நனவாக்கி வரும் ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உலக அமைதி பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது (33). இவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
தனது உழைப்பில் ஒரு பங்கை மரக்கன்றுகளை நடுவதற்கு செலவிட்டு வருகிறார். இதுவரை இவர் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். சாகுல் ஹமீது, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்க மாநில தலைவராகவும் உள்ளார்.
இவரது இந்த செயலைப் பாராட்டி, உலக அமைதி பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. தமிழகத்தில், டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையை சாகுல் ஹமீது பெற்றிருக்கிறார்.