மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து, சுகாதாரத்துறை விளக்கம் அளிக்கையில், தடுப்பூசிக்கும், விவேக்கின் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்தது.
ஆனால், விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. அதையும் மீறி மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியது குறித்து டிஜிபி அலுவலகத்திலும், சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரை பதிவு செய்து, தடுப்பூசி குறித்து பேசியதால் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள். முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் புதிய மனு தொடர உத்தரவிட்டார்கள்.