கொரோனா பரவல் - நீதிமன்றங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

tamilnadu
By Nandhini Apr 21, 2021 06:18 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.

நீதிபதிகள் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அடுத்தகட்ட உத்தரவுகளுக்காக, நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவை செயல்படுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுத்தாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்தப்படுவதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் அறிவித்துள்ளார். அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களை போட வேண்டும் என்று அறிவுறித்தப்பட்டுள்ளது.

நேரடி விசாரணைக்கு அவசியம் என விருப்பப்படும் வழக்குகளில் இரு தரப்பும் தேதியை முடிவு செய்து, அதற்கான கூடுதல் மனுவுடன் மூன்று நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டுமென தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலிக்கும் நீதிபதி, நேரடி விசாரணைக்கு அனுமதித்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ மற்றும் எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், அதுதொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாமல் எவரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டர்கள் என்றும், உரிய அனுமதி சீட்டு கிடைத்தபின் உள்ளே அனுமதிப்படும் நபர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்ற ஊழியர்கள், வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்துக்கு வந்த பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படாததால், வளாகத்துக்கு வெளியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் உயர் நீதிமன்ற வளாகம், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மனுக்களை தாக்கல் செய்வதற்கான பெட்டியும், வளாக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.