தமிழக மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது, சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, தேர்தல் கமிஷன் திமுக கட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க கட்சியினருடன் வேட்பாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
கொரோனா இரண்டாவது அலை துவங்கியதும், மாநிலம் முழுதும் கட்சியினர், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிட்டோர், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. எனவே, ஆர்.எஸ்.பாரதி வாயிலாக, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., சார்பில் அனுமதி கோரப்பட்டது.
அதை ஏற்று, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தி.மு.க. வேட்பாளர்களும், மாவட்ட செயலர்களும், கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். கபசுரக் குடிநீர் வழங்கும் போது, அந்நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.