மீண்டும் ஊரடங்கால் தமிழகத்தை விட்டு வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்
மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தை விட்டு வடமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு நேர ஊரடங்கையும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் தனியார் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்கள் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் மூலம் வீட்டிலிருந்து பணி இடங்களுக்கு சென்று திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தை விட்டு வடமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
கடந்த முறை கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அத்துடன் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர்கள் உணவு, தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். தனது சொந்த பந்தங்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். அத்துடன் பல கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சிலர் சென்று சேர்ந்தனர். இதில் பல உயிரிழப்புகளும் நேர்ந்தது.
இதை கருத்தில் கொண்டு முன்னதாகவே சொந்த ஊர் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வடமாநிலத்தவரின் கூட்டம் அலை மோதுகிறது. பாட்னா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வட மாநிலத்தினர் இன்று இரவு 7 மணிக்கு ரயிலில் செல்ல முன்பதிவு மற்றும் தக்கலில் செல்லவும் முடிவெடுத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.