“ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அதை கருத்து சுதந்திரமாக ஏற்க வேண்டும்” - இளையராஜா கருத்திற்கு ஆளுநர் தமிழிசை ஆதரவு
பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது. அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி, பிரதமர் மோடி, அம்பேத்கர் போன்று செயல்படுவதாகவும் மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை தரமணியில் சி.எஸ்.ஐ.ஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜன், அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அம்பேத்கர் அனைவரின் கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். அப்படியிருக்கும் போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல. ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அதை கருத்து சுதந்திரமாக கருதி ஏற்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது” என அவர் தெரிவித்தார்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan