பிரதமர் மோடியின் படம் இடம்பெறாததுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது... - துணை நிலை ஆளுநர் தமிழிசை
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் (நாளை) 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
ஒலிம்பியாட் ஜோதி
கடந்த ஜூன் 19-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து, ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஒலிம்பியாட் ஜோதி, நாற்பது நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வந்தடைகிறது.
பிரதமர் மோடி வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வருகை தர இருக்கிறார். சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 4.45 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
துணை நிலை ஆளுநர் தமிழிசை வருத்தம்
கடந்த 23ம் தேதி புதுச்சேரிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இல்லை. இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து, எல்லா இடங்களிலும் அவரது படத்தை இடம்பெற செய்ய வேண்டும். செஸ் ஒலிம்பியாட் போட்டி சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும். பிரதமர் மோடியின் படம் இடம்பெறாததுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.