திமுகவினர் ஆளுநர் மாளிகைக்கு சென்றது ஏன்? - தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி
எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வேண்டாமா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் தபால்காரர்
மாநில ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. நியமனப் பதவியான ஆளுநர் பதவி ஒரு கவுரவப் பதவிதான்.
எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் கவர்னர், பச்சையான பாஜககாரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்" என கூறினார்.
தமிழிசை பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆளுநரை போஸ்ட் மேன் என்கிறீர்கள், பின்பு நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்காக உங்கள் கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள்?
எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வேண்டாமா? அந்தந்த பொறுப்புக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்" என கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட ஸ்டாலின் அரசால் நல்ல குடிநீரை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது என பேசினார்.