மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால், திமுகவிடம் நிறைய நிதி இருக்கிறது - கலாய்த்த தமிழிசை!
மும்மொழிக் கொள்கை பற்றி திமுக அரசிற்கு என்ன தெரியும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழிசை
மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதற்குக் காரணம் தமிழக அரசு தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஏற்கவில்லை .மேலும் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இன்னும் தமிழக அரசு சேரவில்லை. இந்த சூழலில் அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ,'' மும்மொழி கொள்கை பற்றி திமுக அரசிற்கு என்ன தெரியும்.? பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தோடு இணைந்து பிரெஞ்சு படிப்பதற்குத் தமிழக அரசு ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் இருக்கும் இன்னொரு மொழியான ஹிந்தியை மாணவர்கள் படிப்பதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்.?
திமுகவுக்கு என்ன தெரியும்?
தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படவில்லையா.? அரசுப் பள்ளி மாணவர்கள் இன்னொரு மொழி கற்றுக்கொள்ளக் கூடாதா.? அரசுப்பள்ளி மாணவர்களின் வாய்ப்பைத் தமிழக அரசு தடுக்கிறது என்று கூறினார்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால், திமுகவிடம் நிறைய நிதி இருக்கிறது. தயாநிதி, உதயநிதி, கருணாநிதி, அருள் நிதி, இன்ப நிதி என நிறைய நிதி உள்ளதே என்று கூறினார் . மேலும் தேசியக் கல்விக்கொள்கை பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகின்றனர்.
உலக அரங்கிற்கு நம்முடைய மாணவர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் தேசியக் கல்விக் கொள்கை என்று தெரிவித்தார்.