வேல் பிடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது-ஓபிஎஸ் பேச்சு!
ஆள் பிடித்தாலும் வேல் பிடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை திருமங்கலம் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 12 ஏக்கரில் ஆலயம் அமைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருவருக்கும் 7 அடியில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலை இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் மதுரையில் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம் பத்து வருடம் திமுகவினர் காய்ந்து போயிருப்பதாக கூறினார்.
மேலும் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பக்கொல்லையில் புகுந்த கதையாகிவிடும். வேண்டா வெறுப்பாய் பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என்று பெயர் வைத்தது போல விழிக்கிறார் ஸ்டாலின்.

வடக்கே சென்று ஆள் பிடிக்கிறார்கள் ஆட்சியை பிடிக்க சிலர் கையில் வேலை பிடித்து வருகிறார்கள். ஆள் பிடித்தாலும் வேல் பிடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்றார். இதனிடையே மதுரை அருகே ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வருக்கு பரிசாக வேல் தரப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட திமுகவினர், மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளிக்கபட்ட புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.